மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால், காசி தமிழ் சங்கமம் கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நோக்கம் தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள நீண்ட நெடிய பண்பாட்டுக் கூறுகளை உணர வைப்பது மற்றும் காசியில் உள்ள மக்களுக்கு தமிழின் பெருமையை எடுத்துரைப்பது ஆகும்.
இந்த ஆண்டு 4வது காசி தமிழ் சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக 300 மாணவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். “தமிழ் கற்போம்” என்ற முன்னெடுப்பின் மூலம் இந்த மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 10 கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 29 வரை இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 10 நாட்கள் தங்கி, தமிழ் மொழியை கற்றுக் கொள்வார்கள். இதற்கான பாடத்திட்டத்தை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.
இந்த நிகழ்வுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிக்கு 27 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் படிக்கும் மாணவர்கள். தினசரி தமிழ் கற்றல் வகுப்புகள் நடைபெறுகின்றன. மாலை நேரங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்கள் புராதனமான நினைவுச் சின்னங்கள் கல்வெட்டுகள் போன்றவற்றை பார்ப்பதற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த மாணவர்கள் வெள்ளியங்கிரி மலை சிவன் கோயில், அனுவாவி சுப்பிரமணியர் கோவில், காரமடை ரங்கநாதர் ஆலயம், சிறுமுகை தென் திருப்பதி என கோவையின் முக்கிய வரலாற்றுப் பகுதிகளை பார்வையிட்டனர்.
இதன் மூலம் தமிழகத்தின் ஆன்மீகம் பண்பாடு, மொழி, மக்களின் வாழ்வியல் போன்றவற்றை கற்றுக் கொள்கின்றனர். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இந்நிகழ்ச்சியை கடந்த 21ம் தேதி கல்லூரியின் செயலர் சி.ஏ. வாசுகி துவங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சங்கீதா, தமிழ் துறை மூத்த பேராசிரியர் முத்துக்குமார் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர்.

டிசம்பர் 30ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில், இந்த மாணவர்களை வாழ்த்துவதற்காக துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வர உள்ளார்.
