பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாகப் பொள்ளாச்சியில் களைகட்டும் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா, இம்முறை கோவையில் நடைபெறவுள்ளது. இது 11வது ஆண்டாக நடத்தப்படும் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, எல் & டி பைபாஸ் சாலையில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜனவரி 15 முதல் 18 வரை நடைபெற உள்ளது.
இதற்காக பிரேசில், தாய்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விதம் விதமான வடிவங்களில் ராட்சத பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கார்ட்டூன் பொம்மைகள், விலங்குகள் வடிவிலான பலூன்கள் வானில் மிதப்பதை பார்க்கலாம்.
மாலை நேரத்தில் வண்ண விளக்குகளால் பலூன்கள் ஒளிரும் நைட் க்ளோ ஷோ, இசைக்கச்சேரி, உணவுக்கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியும் இடம்பெறும்.
பலூனில் ஏறிப் பறக்கவும் வாய்ப்புள்ளது. தரையிலிருந்து கயிறு மூலம் கட்டப்பட்ட பலூனில் சுமார் 60-80 அடி உயரம் வரை மேலே சென்று சில நிமிடங்களில் கீழே இறங்கலாம். ஆனால், காற்று வீசும் வேகத்தைப் பொறுத்து மட்டுமே இயக்கப்படும்.
கண்காட்சியை வேடிக்கை பார்க்கப் பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணமாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://www.tnibf.com/ என்ற ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம். மேலும்], பலூனில் பறக்கத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் அல்லது குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குறிப்பாக, மாலை 4 மணிக்கே மைதானத்திற்குள் அனுமதி உண்டு. பலூன் பறப்பது முழுவதும் வானிலையைச் சார்ந்தது என்பதால், காற்று அதிகமாக வீசினால் பாதுகாப்பு கருதி பறக்கவிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
