தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கை முறையும் உடல் அமைப்பும் பெரும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஸ்மார்ட்போன் இன்று ஒரு சாதனமாக அல்லாமல், பலருக்கும் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.
ஒரு காலத்தில் 50 அல்லது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே அதிகமாக காணப்பட்ட கழுத்து மற்றும் முதுகு வலி, இன்று 20களில் இருக்கும் இளைஞர்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இதற்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் முறையே முக்கிய காரணம் என ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் போது, நாம் அறியாமலேயே தலையை முன்னால் குனிந்து கொள்கிறோம். இந்த நிலை ‘டெக்ஸ்ட் நெக்’ எனப்படும். மனிதத் தலையின் எடை சராசரியாக 4.5 முதல் 5 கிலோ வரை இருக்கும். ஆனால், நாம் சுமார் 60 டிகிரி கோணத்தில் தலையைக் குனிந்து போனைப் பார்க்கும்போது, கழுத்து எலும்புகள் மற்றும் தசைகள் மீது சுமார் 27 கிலோ எடைக்கு சமமான அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக பல மணி நேரம் இவ்வளவு அழுத்தத்தைத் தாங்க வேண்டிய நிலையில், கழுத்துத் தசைகள் பலவீனமடைந்து, காலப்போக்கில் கடுமையான வலி, தண்டுவட பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் கழுத்து மட்டும் பாதிக்கப்படுவது அல்ல. அது முதுகுத் தண்டின் ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கிறது. சோபாவில் சாய்ந்தபடியோ, படுக்கையில் படுத்தபடியோ போன் பார்ப்பதால், முதுகெலும்பின் இயல்பான வளைவு பாதிக்கப்படுகிறது.
ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்து போனைப் பயன்படுத்துவதால், முதுகுத் தசைகள் மரத்துப் போகத் தொடங்குகின்றன. இது நாளடைவில் நீண்டகால முதுகு வலியாக மாறுகிறது. மேலும், ஸ்க்ரீன் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதால், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது குறைவதால், எலும்புகளும் தசைகளும் பலவீனமடைகின்றன.
மேலும் கழுத்துப் பகுதியில் அவ்வப்போது பிடிப்பு அல்லது சுளுக்கு போன்ற உணர்வு, தோள்பட்டை மற்றும் மேல் முதுகில் தொடர் வலி, நீண்ட நேரம் குனிந்திருந்த பிறகு ஏற்படும் தலைவலி, கைகளில் அவ்வப்போது மரத்துப்போகும் தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
எனவே, போனைப் பயன்படுத்தும்போது தலையைக் குனிவதற்குப் பதிலாக, கண்களுக்கு நேராக உயர்த்திப் பிடிக்கவும். இது கழுத்தின் மீது விழும் அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை, போனைப் பார்ப்பதை நிறுத்தி, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
