இந்திய மருத்துவ சங்க கோவை அமைப்பின் 102வது ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. 102வது தலைவராக டாக்டர் கோஷல்ராம் பொறுப்பேற்றார். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழுவில் செயலாளராக டாக்டர் பரமேஸ்வரன், நிதிச் செயலாளராக டாக்டர் பாலமுருகன் பொறுப்பேற்றனர்.

விழாவில் முதன்மை விருந்தினராக தமிழ்நாடு மாநில கிளையின் தலைவர் டாக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டார்.  சிறப்பு விருந்தினர்களாக காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால், ஹாஸ்பிடல் போர்ட் ஆஃப் இந்தியா தலைவர் டாக்டர் அபுல் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் 2026-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநிலத் தலைவர் தேர்வு டாக்டர்  ரவிகுமார், 2027 ஆம் ஆண்டிற்கான மாநிலத் தலைவர் டாக்டர் தியாகராஜன், மாநில கௌரவச் செயலாளர்  டாக்டர் திரவியன் மோகன், மாநில நிதிச் செயலாளர் டாக்டர் சாலமன் ஜெயா, முன்னாள் மாநிலச் செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் பாராட்டினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் கோசல்ராம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகம் ஏற்பட்டிருந்தாலும் அதிகமாக கண் தானம் தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். அண்மைக்காலமாக செல்போன் பயன்பாடு அதிகம் இருப்பதன் காரணமாக கண் கருவிழி பாதிப்பும் அதிகரித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் கண்களுக்கு 20 நிமிடம் ஓய்வு என்ற ஒரு விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் ரவிக்குமார், தேசிய அளவில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை இதுபோன்ற தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், அதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.