கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை செல்லும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி.சுப்பிரமணியம்’ பெயரை வைத்தமைக்காக குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வழியாக ஒப்பணக்கார வீதி வரை செல்லும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரைச் சூட்டிய, தமிழக அரசுக்கு கிருஷ்ணராஜ் வாணவராயர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

கோவையில் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்த அவர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவிற்காகத் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிர்ந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.