கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற 78 வயதான மூதாட்டி. இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் தனது மகனை இழந்தார்.

இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்த இவர், தன்னிடம் உள்ள பழைய செல்லாத 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றி தந்து உதவுமாறு மனு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூதாட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அரசிடம் உதவி கிடைக்காத நிலையில் அடுத்தது தீக்குளித்து சாக வேண்டியது தான் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், முதன்மை வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக மாற்றி கொடுக்க உத்தரவிட்டார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செய்தியாளர்கள் ரூ.3000 வரை பணத்தை மாற்றி மூதாட்டியிடம் கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த அதிமுக சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மூதாட்டி தங்கமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவருக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.15 ஆயிரத்தை வழங்கினார்.