சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க.வின் வேட்பாளராக களமிறங்கும் கே.ஆர்.ஜெயராமை அறிமுகம் செய்யும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. கழக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ், அதிமுக மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டு காலங்களில் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் அடங்கிய வாக்குறுதி புத்தகத்தை கே.ஆர்.ஜெயராம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் உருவாக்கி இருந்தார். அதை இந்த நிகழ்ச்சியின் போது எஸ்.பி வேலுமணி வெளியிட , அதன் முதல் பிரதியை ரமேஷ் குமார் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக கே.ஆர்.ஜெயராம் அறிவிக்கப்பட்ட உடனே அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று கூறினார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கே.ஆர்.ஜெயராம் இருந்திருக்கிறார். இதை தான் ஐந்தாண்டு கால சட்டமன்றத்தில் அதிமுக கொறடாவாக இருந்தபோது அவர் நடவடிக்கைகளை பார்த்து அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்காநல்லூர் பகுதி மக்களின் தேவைகளுக்காக பலமுறை கோரிக்கைகளை தன முன் வைத்திருக்கிறார் கே.ஆர்.ஜெயராம் என்று குறிப்பிட்ட அவர், தொகுதி மக்கள் கூப்பிட்ட குரலுக்கு விரைந்து வந்து அதற்கான பதில்களை தரும் நபராக ஜெயராம் இருந்துள்ளார் என்று பாராட்டினார். கொரோனா தொற்று காலங்களில் அவர் செய்த பணி பாராட்டும்படியாக இருந்தது எனவும் அந்த நாட்களில் மக்களின் வீடுகளுக்கு சென்று நிவாரணத்தை வழங்கியவர் கே.ஆர். ஜெயராம் என்பதை நினைவு கூர்ந்தார்.

ஒரு வேட்பாளரை மக்கள் வெற்றி பெற செய்வது மக்களுக்கான பணியை செய்யத்தான், அந்த வகையில் கே.ஆர். ஜெயராம் மக்கள் பணியை மிக சிறப்பாக செய்தவர் என்பதை மறுக்க முடியாது என்று எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டார்.

அடுத்த 21 நாட்கள் தொண்டர்கள் அயராது உழைத்து கே.ஆர்.ஜெயராமை,  சென்ற முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அம்மன் கே. அர்ஜுனன் பேசுகையில், கழக தொண்டர்கள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் அடுத்து வரும் நாட்களில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் இல்லத்துக்கு ஐந்து முறையாவது சென்று, அவர்களிடம் மரியாதையான அணுகு முறையுடன், ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய கே.ஆர்.ஜெயராம், அதிமுக ஆட்சிக்காலத்தில் சிங்காநல்லூர் தொகுதி மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஒரு அரசு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கொண்டுவரப்படும், நீலிகோணம்பாளையம் வழியே கோவை விமான நிலையம் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை, கல்வி பயிற்சி மையம் போன்ற 23 திட்டங்கள்  செயல்படுத்தப்படும் என்று கூறினார்.