சத்குரு அகாடமி சார்பில் “இன்சைட்” எனும் தொழில் முனைவோர்களுக்கான தலைமைத்துவம் தொடர்பான நிகழ்ச்சியின் 14வது பதிப்பு, ஈஷா யோக மையத்தில் தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஐக்கிய பேரரசு, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி வணிகத்தில் ஈடுபடும் மனிதர்களை அனைத்தையும் அரவணைக்கும் உணர்வுடன் உலகில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் நடத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பேசிய சத்குரு, ஏஐ மூலம் ‘அறிவுசார் கூலிகளின்’ அதிகாரம் மிக விரைவில் மறையப் போகிறது, இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயந்திரத்தால் செய்ய முடியாதவைகளை செய்ய உங்கள் மூளையையும் புத்திசாலித்தனத்தையும் இனி பயன்படுத்த வேண்டும். ‘இயந்திரங்கள் வந்தால் எல்லாம் போய்விடும்’ என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் தரவு சார்ந்த வேலைகள் மட்டுமே போகும்.
குறிப்பாக ஒரே ஒரு வேலைக்கான நேர்காணலைச் சரியாகச் செய்துவிட்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று நினைப்பவர்களுக்குத் தான் இது சவால். நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இது நீங்கள் நினைத்துப் பார்க்காத மில்லியன் கணக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
ஒரு தொழில்முனைவோராக நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது, சூழ்நிலைக்கு ஏற்ப விரைந்து செயல்படுவதை தான். மேலும் தொழில்முனைவோர் என்றால் வெறும் பிழைப்பை பற்றி மட்டும் சிந்திக்க கூடாது, வாழ்க்கையை முழுமையாக கொடுத்து புதிதாக ஒன்றை உருவாக்கத் துடிக்கும் ஒரு சாகசக்காரராக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்தாண்டு நிகழ்ச்சியில், முக்கிய பேச்சாளர்களாக, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முன்னாள் தலைவர் மாதவி பூரி புச், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைவர் நிதின் பரஞ்ச்பே, கான்ஷியஸ் கேபிடலிசம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் எமரிட்டஸ் ராஜ் சிசோடியா, டைட்டன் கேப்பிட்டலின் இணை நிறுவனர் ரோஹித் பன்சல், டீஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான சஷாங்க் குமார் மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் மயக்கவியல் பேராசிரியரும், கான்ஷியஸ் ப்ளானட் சத்குரு மையத்தின் இயக்குநருமான பாலா சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
