செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகத்தை அசுர வேகத்தில் மாற்றி வருகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து பெரிய நிறுவனங்களின் முடிவுகள் வரை, எல்லாவற்றிலும் ஏஐ தன் சுவட்டை பதித்து வருகிறது. இதனால் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைவடைந்துள்ளன என்றாலும், அதே சமயம் புதிதாக வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. அதாவது, ஏஐதொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டால், புதிதாக வேலையும் கிடைக்கும்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக இணையத்தின் மிக நம்பகமான தகவல் களஞ்சியமாக விளங்கி வந்த விக்கிப்பீடியா தற்போது பயனர்களை இழந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பு எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள மக்கள் முதலில் தேடிய தளம் விக்கிப்பீடியா தான். ஆனால், இன்று ஏஐ வசதிகள் குறிப்பாக சாட்பாட்கள், ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகள் போன்றவை மிக எளிதாகவும், வேகமாகவும் பதில்களை வழங்குவதால், பலரும் அவற்றை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் விக்கிப்பீடியாவின் பக்க பார்வைகள் 8 சதவீதம் வரை குறைந்துள்ளன என அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன. ஏஐயின் மூலம் தகவல்கள் சுருக்கமாகவும், பயனாளி கேள்விக்கேற்ப தெளிவாகவும் கிடைக்கின்றன என்பதால், மக்கள் தற்போது நேரடியாக அதனைப் பயன்படுத்த முனைகின்றனர். இதை விக்கிப்பீடியா நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், யூடியூப், ஷேர்சாட் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தற்போது தகவல்கள், விளக்கங்கள், சிறு வீடியோக்கள் என பல வடிவங்களில் கிடைக்கின்றன. இதனால், இளம் தலைமுறை பெரும்பாலும் அவற்றிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். விக்கிப்பீடியாவை நாடும் பழக்கம் குறைந்து வருவது இதனால் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், ஏஐ தளங்கள் வழங்கும் பதில்களில் விக்கிப்பீடியா ஆதாரங்களாகக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, விக்கிப்பீடியா நேரடி பயனர்களை இழந்தாலும், அதன் தகவல்கள் ஏஐ தளங்களின் வழியாக மறைமுகமாக பயன்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் விக்கிபீடியாவை நாடும் பயனர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த எண்ணிக்கை மேலும் குறையத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மொழிகளில் விரிவான தகவல்களை தந்து வருவதால், விக்கிப்பீடியா இன்னும் உலகின் மிகப் பெரிய அறிவுக் களஞ்சியமாகவே உள்ளது. ஆனால், தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், விக்கிப்பீடியா போன்ற தளங்கள் தங்களின் வடிவமைப்பிலும் பயன்பாட்டு முறைகளிலும் புதுமைகளைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
