கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆதியோகி ரத யாத்திரை நேற்று மதுரையை வந்தடைந்தது.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை கடந்த 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் டிச’26-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தென்மண்டல யாத்திரை தேனி வழியாக நேற்று மதுரையை வந்தடைந்தது. டிசம்பர் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரதம் பயணிக்க உள்ளது.
மதுரையில் ஆதியோகி ரதம் ஜங்ஷன், அண்ணா நகர், பி.பி.குளம் போன்ற முக்கியப் பகுதிகள் வழியாக பயணிக்க உள்ளது. குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்களான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர், திருவேடகம் ஏடகநாதர், செல்லூர் திருவாப்புடையார் மற்றும் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆகிய திருக்கோயில்கள் வழியாக செல்ல உள்ளது.
மதுரையைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் சிவகங்கை, காளையார்கோவில், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய பகுதிகளில் இந்த ரத யாத்திரை தொடர உள்ளது. அதனைத் தொடர்ந்து டிச 31-ஆம் தேதி முதல் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி வழியாக விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ளது.
பின்னர் ஜன’20-ஆம் தேதி முதல் தென்காசி, சுரண்டை, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, கூடங்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாகப் பயணிக்கும் இந்த ரதமானது, பிப் 1 முதல் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், வெள்ளிச்சந்தை, நாட்டாலம், மார்த்தாண்டம், மேல்புறம் மற்றும் புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாகப் பயணிக்க உள்ளது.
