சட்டப்பேரவையில் வினா-விடை நேரத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அதனை சரிசெய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, கோவையில் உள்ள இந்த பாலம் பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரியதன் அடிப்படையில் 10.10 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டதாக தெரிவித்தார்.
உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
மேம்பாலம் திறக்கப்பட்ட பின் விமானநிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், அங்கு ரப்பர் வேகத் தடைகள் அமைக்கப்பட உள்ளன. கூடுதலாக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
