5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை பள்ளிகளின் மூலமாக புதுப்பிக்கும் பணிகளை தொடங்க இருப்பதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

7 வயதை அடைந்த குழந்தைகளின் ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வலியுறுத்தி உள்ளது. ஆதார் விதிகளின்படி குழந்தை 5 வயதை அடையும் போது, கைரேகை, கருவிழி, புகைப்படம் ஆகிய விவரங்கள், ஆதார் அட்டையில் கட்டாயம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

5 முதல் 7 வயது வரையிலான கால கட்டத்தில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பிற்கு கட்டணம் கிடையாது. ஆனால் 7 வயதுக்கு பிறகு ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்ளானவர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு இல்லாமல் ஆதார் எண் வழங்கப்படுகிறது.

சுமார் 7 கோடி குழந்தைகளுக்கு ஆதார் எண் இல்லை என ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளிகள் மூலமாக குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணிகள் இன்னும் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்கான முன்னேடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.