இந்தியாவின் வேலைவாய்ப்பு சூழல் கடந்த சில வருடங்களில் கவனிக்கத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது. ஒருகாலத்தில் நிரந்தர சம்பள வேலை என்பது இளைஞர்களின் இலக்காக இருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை மாறியுள்ளதை காண முடிகிறது. இளைஞர்கள் சுயதொழிலின் பக்கம் அதிகம் திரும்பியுள்ளனர். இதனை ஹெச்.எஸ்.பி.சி வங்கி வெளியிட்டுள்ள ‘இந்தியாவில் வேலைவாய்ப்புப் போக்குகள்’ என்ற அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2018 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உருவான புதிய வேலைகளில் மிகப்பெரிய பங்கை சுயதொழில் வகித்துள்ளது. 2018 நிதியாண்டில் 239 மில்லியன் மக்கள் சுயதொழிலில் இருந்த நிலையில், 2024 நிதியாண்டில் அந்த எண்ணிக்கை 358 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது சம்பள வேலைகள் மற்றும் கூலி வேலைகளின் வளர்ச்சியை விட மிக அதிகம்.
இதனுடன் ஒப்பிடும்போது, சம்பள வேலைகள் 105 மில்லியனிலிருந்து 119 மில்லியனாக உயர்ந்துள்ளன. இதன் வளர்ச்சி விகிதம் 4.1 சதவீதம் மட்டுமே. கூலி வேலைகளின் வளர்ச்சி இதைவிட குறைவாக 1.1 சதவீதத்தில் தங்கிவிட்டது.
இந்தியாவில் வேலை பங்கேற்பு விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2018-ல் 53 சதவீதமாக இருந்த நிலையில், 2024-ல் 64.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 15 முதல் 59 வயதுக்குள் உள்ள மக்கள் இப்போது வேலை செய்கிறார்கள் அல்லது வேலை தேடுபவர்களாக உள்ளனர்.
2024 நிதியாண்டின் படி, இந்தியாவில் மொத்தம் 614 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பில் இருக்கின்றனர். இதில் 54 சதவீதம் விவசாயம் அல்லாத துறைகளிலும், 46 சதவீதம் விவசாயத் துறையிலும் உள்ளனர். இந்த காலகட்டத்தில் பெண்களின் வேலைவாய்ப்பு பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
மொத்தம் 155 மில்லியன் புதிய வேலைகளில், 103 மில்லியன் வேலைகளை பெண்களே உருவாக்கியுள்ளனர். குறிப்பாக விவசாயத் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்து 74 மில்லியனாக உயர்ந்துள்ளது. பெண்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி ஆண்களை விட இருமடங்கு வேகத்தில் நடந்திருக்கிறது.
விவசாயம் அல்லாத துறைகளில் சேவைத் துறையே அதிக வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் 41 மில்லியன் புதிய வேலைகள் உருவாகியுள்ளன. கட்டுமானம் 20 மில்லியன் வேலைகளையும், உற்பத்தித் துறை 15 மில்லியன் வேலைகளையும் வழங்கியுள்ளது. உற்பத்தித் துறையில் ஜவுளி மற்றும் ஆடைத் துறை மட்டும் 33 சதவீதம் பங்களிப்பைச் செய்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையும் வேலைவாய்ப்பில் முக்கிய சக்தியாக உள்ளது. 2024 நிதியாண்டில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உருவான வேலைகளில் இந்த துறை 48 சதவீத பங்களிப்பைச் செய்துள்ளது.
2018 முதல் 2024 வரை இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. சம்பள வேலைகளை விட சுயதொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கையும், குறிப்பாக பெண்களின் பங்களிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
