வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம் இருக்கிறது என ஈஷாவின் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் முன்னோடி தொழில் முனைவோர்கள் பேசினர்.

ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O” பயிற்சி கருத்தரங்கு, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. இதில் விவசாயிகள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா வரவேற்புரை ஆற்றினார். சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் நரேந்திர குமார் மற்றும் மத்திய வேளாண் விரிவாக்க அலுவலகத்தின் இணை இயக்குநர் செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கருத்தரங்கில் எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முத்தமிழ்ச்செல்வன்,  நபார்டு வங்கியின் பொது மேலாளர் ஹரி கிருஷ்ணன்,  வசீகர வேதா நிறுவனத்தின் விஜயா மகாதேவன், மதுரை தனா ஃபுட் புராடக்ட்ஸ் உரிமையாளர் தனலட்சுமி, சி சேஞ்ச் வணிக ஆலோசனை நிறுவனத்தின் நிறுவனர் எம்.கே.ஆனந்த் ஆகியோர் பேசினர்.

isha 2 1

பணங்கருப்பட்டி மதிப்புகூட்டு பொருள்கள் குறித்து பாம் இரா ஃபுட்ஸ் நிறுவனர் கண்ணன், நஞ்சில்லா உணவு பொருட்கள் தயாரிப்பில் கொட்டும் லாபம் குறித்து சென்னை மை ஹார்வெஸ்ட் பார்ம்ஸின் அர்ச்சனா ஸ்டாலின், அக்ரி ஸ்டார்ட் அப் குறித்து ஆதி முதல் அந்தம் வரை பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தின் வசந்தன் செல்வம், உலகத்தரத்திலான பிராண்டிங், பேக்கேஜிங் குறித்து மதுரையைச் சேர்ந்த பேக்கேஜிங் நிபுணர் அஸ்வின் உள்ளிட்டோர் துறை சார்ந்த நுட்பங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

கருத்தரங்கு வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் சிறிய வேளாண் இயந்திரங்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைப்பெற்றது.