கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சிவகுமாரனுக்கு ஃபார்ச்சுனா குளோபல் எக்கசலன்ஸ் அவார்ட் (Forttuna Global Excellence Award) சார்பில் சிறந்த முதன்மை செயல் அதிகாரி விருது வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவத் துறையில் தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய தலைமை மற்றும் புதுமைகள் புகுத்துதல் ஆகியவற்றில் சிறப்பான செயல்திறனுக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஃபார்ச்சுனா குளோபல் என்பது பல்வேறு தொழிற்துறைகளில் சிறந்து விளங்கும் குறிப்படத்தக்க சாதனைகள் செய்த நபர்களைப் பாராட்டி கெளரவித்து விருது வழங்கும் அமைப்பாகும். குறிப்பாக ஆரோக்கியம், உடல் நலம், வர்த்தக செயல்பாட்டுத் திறன் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது
விருது தேர்வுக் குழுவினர் 3,50,000 சுயவிவர ஆவணங்களைப் பரிசீலித்து, 18000 நேர் முகங்கள் நடத்தி, 81 நாடுகளில் இருந்து 4000 விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றில் இருந்து 47 நாடுகளில் இருந்து விருது பெறத் தகுதியான 94 நபர்களைத் தேர்வு செய்துள்ளனர். மருத்துவத் துறையில் குறிப்பிட்ட பிரிவில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் டாக்டர் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 7-ம் தேதி துபாயில் குயின் எலிசபத் 2 என்ற கடலில் மிதக்கும் சொகுசுக் கப்பலில் நடைபெற்ற விழாவில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த முதன்மை செயல் அதிகாரி விருது டாக்டர் சிவகுமாரனுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் சிவகுமாரன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் சேவையாற்றிவருகிறார். மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு பிரபல ஆய்விதழ்களில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த வருடம் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வழங்கிய மருத்துவத் துறை தொலை நோக்காளர் விருதையும் வேர்ல்டு ஹெல்த் அண்டு வெல்னஸ் காங்கிரஸ் வழங்கிய மோஸ்ட் ஐகானிக் ஹெல்த் கேர் லீடர் குளோபல் விருதையும் இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் சிவகுமாரன் அவர்களுக்கு சிறந்த முதன்மை செயல் அதிகாரி விருது கிடைத்துள்ளதை மிகவும் பெருமைக்குரியதாகக் கருதுகிறோம். கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை வளர்ச்சியிலும் வெற்றியிலும் டாக்டர் சிவகுமாரன் குறிப்பிடத்தக்க பங்காற்றிவருகிறார். அவருடைய கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் இந்த விருது ஒரு சான்றாகும் என்று கே.எம்.சி.ஹெச் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தனது பாரட்டுரையில் தெரிவித்துள்ளார்.
தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, டாக்டர் சிவகுமாரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு மருத்துவமனையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.