இந்திய அணுவியல் மருத்துவ கழகத்தின் 56-வது தேசிய அளவிலான கருத்தரங்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் அணுவியல் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்றது.
பல்வேறு வகையான புற்றுநோய்களை முன்கணிப்பு செய்வது, துல்லியமாகக் காண்டறிவது மற்றும் அவற்றுக்கு ஏற்ற சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் அணுவியல் மருத்துவம் குறிப்படத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இக்கருத்தரங்கில் அவை தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இந்தியா, தென்னாபிரிக்கா, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் இருந்து 550-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
‘அணுவியல் மருத்துவத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் இந்திய அணுவியல் மருத்துவ கல்லூரி நடத்திய முதல் நாள் நிகழ்வில் பெண் பேச்சாளர்கள் மட்டும் கலந்துகொண்டு பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்து உரைகள் நிகழ்த்தினர். இதில் கே.எம்.சி.ஹெச். துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி கலந்துகொண்டு பெண் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி உரை நிகழத்தினார்.
முன்னதாக இந்திய அணுவியல் சங்கத்தின் தலைவர் டாக்டர் பிரபு வரவேற்புரை வழங்கினார். கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி தனது உரையில் அணுவியல் மருத்துவத்தில் கேஎம்சிஹெச் அணுவியல் மருத்துவத் துறை ஆற்றிவரும் பங்களிப்புக்கள் குறித்து எடுத்துரைத்தார். நோயாளிகளுக்கு மேலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிட இதுபோன்ற கருத்தரங்குகள் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பேராசிரியர் ரூடி டிரக்ஸ் ஐரோப்பிய அணுவியல் மருத்துவ சங்கம் மற்றும் இந்திய அணுவியல் மருத்துவ சங்கத்தின் உலகளாவிய கூட்டு முயற்சி பற்றி விளக்கினார். டாக்டர் கமலேஸ்வரன், டாக்டர் ராம்குமார் மற்றும் திரு. ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். அணுவியல் மருத்துவ துறை இணைந்து இக்கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெறத் தேவையான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.