கோவை சரவணம்பட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவுற்று கண்காணிப்பு அறை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் இதுவரை 25,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இதன் மூலமாக குற்றங்கள் குறைந்துள்ளன என பேசினார்.
கோவை சரவணம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆதவா பேக்கேஜிங், கோயமுத்தூர் ஹாஸ்டல் ஓனர்ஸ் அசோசியேசன், புரோஜோன் மால் மற்றும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் பங்களிப்புடன் 64 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு சரவணம்பட்டி காவல்நிலையம் ஆய்வாளர் செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில் சோதனைச்சாவடியில் புதியதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அறையினை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், தற்போது 64 கேமராக்களும் முன்னதாக காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1400க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன அனைத்து கேமராக்களும் ஸ்கை லிங்க் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டு சோதனை சாவடியில் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் 2 காவலர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று சரவணம்பட்டி காவல்நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலமாகக் குற்றவாளிகளை உடனடியாக பிடிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைந்து பெண்கள் பாதுகாப்பான பயணத்தைத் தொடர உதவியாக உள்ளது என்றார். மேலும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் வடக்கு துணை ஆணையர் ஸ்டாலின் , சிங்காநல்லூர் சரகம் உதவி ஆணையாளர் வேல்முருகன் , இ3காவல் ஆய்வாளர் செந்தில்குமார், தலைமைக் காவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.