கற்பகம் உயர்கல்வி பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், ‘மருந்தியல் புத்தாக்கக் கண்காட்சி – 2026’ நடைபெற்றது.

கற்பகம் உயர்கல்வி பல்கலைக்கழகத் தலைவர் வசந்தகுமார், கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய மருந்தியல் கவுன்சில் செயற்குழு உறுப்பினர் ஜெயகர் பேசுகையில், இந்திய மருந்துத் தொழில்துறையின் வளர்ச்சி, உலகளாவிய சந்தையில் அதன் விரிவாக்கம், மருந்தியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம், தொழில்துறை முன்னேற்றங்கள் மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

6b 3 scaled

மேலும், மாணவர்கள் தொடர்ந்து புதிய அறிவைப் பெறுவதுடன், தங்களது திறன்களை மேம்படுத்தி, மருந்தியல் துறையில் உருவாகி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன. பல்வேறு பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்காட்சியைப் பார்வையிட்டனர்.