ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தி ராஞ்ச் ஆஃப் லோன்சம் டவ் அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களது கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தொழில்முறைத் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களுடனான தங்களது உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.
நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரா மெடிக்கல் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
