கோவை மாநகராட்சி சார்பில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாமில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரப் பகுதிகளில் சுமார் 1,11,074 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வெறிநாய் நோய் பரவுவதைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.99 மற்றும் 100-க்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் சார்பில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மாபெரும் முகாம்கள் நடத்தப்பட்டு, 2030-ஆம் ஆண்டிற்குள் வெறிநோய் இல்லாத நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு, கோவை மாநகராட்சி தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
