கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட செங்குலம் மற்றும் சுண்டக்காமுத்தூர் அதனைச் சுற்றியுள்ள வாய்க்கால் பகுதிகளை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார்.
கடந்த சில நாட்களாகக் கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கியும், வாய்க்கால்களில் கழிவுகள் அடைபட்டும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட செங்குலம் மற்றும் சுண்டக்காமுத்தூர் அதனைச் சுற்றியுள்ள வாய்க்கால் பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார்.
அப்போது, அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் நெகிழிப் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி, மழைநீர் சீராகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் புகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். வெள்ள நீர் தேங்குவதால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப் பகுதியில் உடனடியாகச் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின் போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
