முன்பெல்லாம் கார் வசதி இல்லாமல் உள்ள வீடுகளில் குடும்பமாக ஏதாவது ஒரு சுப  நிகழ்ச்சிக்கோ, அவசிய தேவைக்கோ, அல்லது வார இறுதியில் பொழுதுபோக்கிற்கோ வெளியே செல்ல வேண்டும் என்றால், அவர்களின் முதல் தேர்வாக இருந்தது பேருந்து & ஆட்டோ பயணம் தான்.

அன்றெல்லாம் வாடகை கார்களில் செல்வது ஆடம்பரம் என்றும், அதிக செலவாகும் என்றும் கருதிய மக்கள், சிக்கனத்துடன் சௌகரியமாக இருக்க ஆட்டோக்களை நாடி வந்தனர். ஆனால் இன்றோ காட்சி தலைகீழாக மாறிவிட்டது.

சில ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிற்கும் ஆட்டோக்களில் கேட்கப்படும் பெரும் கட்டணத்தை விட இன்று உள்ள டாக்சி சேவைகளில் கட்டணம் எதார்த்தமாக இருப்பதாக பயணிகள் உணர்கின்றனர். தற்போது ஆட்டோக்களை வாடிக்கையாளர்கள் நாடுவது குறைந்து வருவது என்பதை மறுக்கமுடியாது.

ஏ.சி. வசதியுடன் நிம்மதியாக டாக்சியில் செல்லலாம் என்று முடிவெடுத்து பலரும் கார்களை நோக்கியே படையெடுக்கின்றனர். ஒற்றை ஆளாக செல்பவர்களுக்கு பைக் டாக்ஸி சேவை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

கெடுபிடி காட்டும் பைக் டாக்சிகள்

ஆனாலும், இன்று பைக் டாக்சி சேவைகளிலும் ஆரம்பித்துவிட்டது கட்டண வேட்டை. செயலியிலேயே கட்டணம் முடிவான பிறகும் கூட, ஓட்டுநர்கள் கூடுதலாக ரூ. 20 முதல் ரூ.30 கேட்கின்றனர். இந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், ஓட்டுநர்களாகிய தங்களிடம் 25% வரை கமிஷன் பிடிப்பதாக கூறி, அந்த இழப்பை பயணிகளின் தலையிலேயே கட்டுகின்றனர்.

‘ஷாக்‘ கொடுக்கும் ரேப்பிடோ ஆட்டோ

விரும்பிய இடத்திற்கு செல்ல என்னதான் இத்தனை தேர்வுகள் வாடிக்கையாளர்களுக்கு இருந்தாலும், ஆட்டோ-வில் செல்வதை தேர்வு செய்வோர், ரேப்பிடோ போன்ற செயலி மூலம் ஆட்டோ பயணத்தை ‘புக்’ செய்தால், அங்கு தான் அவர்களுக்கு காத்திருக்கிறது பேரிடி.

செயலியில் போனால் கட்டணம் குறையும் என்று நம்பினால், சாதாரண ஆட்டோ கட்டணத்திற்கு சற்றும் குறையாமல் பில் போடுகின்றனர் ரேப்பிடோ மூலம் சவாரி வழங்கும் ஆட்டோ ஓட்டுனர்கள். கட்டண உயர்வும் சில ஓட்டுநர்களின் கறாரான அணுகுமுறையும் பயணிகளுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் மட்டுமே தருகிறது.

சற்று நம்பிக்கை தரும் ‘ரெட் டாக்சி‘

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ரெட் டாக்ஸி போன்ற ஒருசில நிறுவனங்களின் ஆட்டோக்களில் பயணிக்கும்போது செயலியில் வரும் சரியான கட்டணத்தை மட்டுமே ஓட்டுநர்கள் வாங்குகின்றனர். ஒரே ஆட்டோ ஓட்டுநர்தான் ஓலா, உபர், ரேப்பிடோ எல்லாவற்றிலும் வண்டியை ஓட்டுகிறார். ஆனால் ரெட் டாக்ஸி என்று வரும்போது நியாயமாக நடக்கும் அதே நபர், மற்ற செயலிகளில் மட்டும் கூடுதல் பணம் கேட்டு பிடிவாதம் பிடிப்பது பயணிகளை திகைக்கவைக்கிறது.

தீர்வு கிடைக்குமா?

தனியார் நிறுவனங்களின் ஆட்டோ மற்றும் பைக் டாக்ஸி சேவைகளில் நடக்கும் இந்த கட்டணக் வேட்டையை சமாளிக்கமுடியாத சாமானிய வாடிக்கையாளர்கள் இறுதியில் தன்னுடைய அவசர தேவைக்காக தனக்கு நஷ்டம் என்றாலும் அந்த அதிக கட்டணத்தை செலுத்தித்தான் பயணிக்கின்றனர்.  இப்படியே சென்றால் ஆட்டோவை நாடுவது மேலும் கூட குறையலாம்.

எனவே, பொதுமக்கள் ஏன் ஆட்டோக்களை விட்டுவிட்டு கார்களை நோக்கி ஓடுகின்றனர் என்பதை ஆட்டோ ஓட்டுநர்கள், ரேப்பிடோ போன்ற நிறுவனங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நியாயமான கட்டணத்தை அரசே முறைப்படுத்தி, அரசு தரப்பில் ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி தந்தால் மட்டுமே ஆட்டோ தொழிலும் பிழைக்கும், மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.