கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
கோவையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில், 7 தளங்களுடன் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 2024-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், 2026-ஆம் ஆண்டில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
கோவையில் முதல்வருக்கு வரவேற்பு
திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், இன்று காலை சுமார் 11 மணியளவில் கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக வேனில் சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, நண்பகல் 12 மணியளவில் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். வளாகத்தின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் அறிவுலகத்தைக் குறிக்கும் கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் மற்றும் அறிவியல் சார்ந்த படைப்புகளைப் பார்வையிட்டார்.
அறிவுலகத்தின் முக்கிய அம்சங்கள்
சுமார் 1.98 லட்சம் சதுரஅடி கட்டடப் பரப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலக வளாகத்தில், நூலகம் மற்றும் அறிவியல் தொடர்பான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கட்டடம் ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நூலக வசதிகள்
ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்களுக்கான தனிப் பிரிவுகள், மின்னணு நூலக வசதி, குழந்தைகளுக்கான நூலகம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான படிப்பகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நூலகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை இங்குள்ளன.
அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நவீன அறிவியல் உபகரணங்களுடன் கூடிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி தொடர்பான அனுபவத்தைப் பெற உதவும் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பிற கட்டமைப்பு வசதிகள்
சுமார் 350 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம், புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் இன்குபேஷன் மையம் உள்ளிட்ட வசதிகளும் இந்த வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நூலகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் அறிவுசார் வளாகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
