கோவை அவிநாசி சாலை, கோல்டு வின்ஸ் பகுதியில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் நடைபெறும் இந்திய தசரா தீபாவளி கைத்தறி மகோத்சவம் விற்பனையை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, 24 கைத்தறி நெசவாளர்களுக்கு 90 சதவீத மானியத்தில் நெசவுக் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், போச்சம்பள்ளி புடவைகள், பெங்கால் காட்டன், பட்டோலா, பைத்தானி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைத்தறி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விலையிலும் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கைத்தறித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நெசவாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்களின் கீழ் கைத்தறி நெசவு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதாவது: கடந்த காலங்களில் நலிவடைந்த நிலையில் இருந்த கைத்தறி நெசவுத் தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைத்தறி ரகங்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்குவதற்கு இந்தக் கண்காட்சி பொதுமக்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. கைத்தறி உற்பத்தி, விற்பனை மற்றும் நெசவாளர் நலனை ஒருங்கிணைக்கும் வகையில் 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கைத்தறிக் கலாசாரம் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்படுவதுடன், நெசவாளர்களுக்கு நேரடி விற்பனை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தரமான ஆடைகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

மேட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைப்பதற்கான இட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.