உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அறிவியல் ஆராய்ச்சியில் உலகளவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகமும், எல்சிவியர் ஆய்வு வெளியீட்டு நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் இப்பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

நடப்பாண்டுக்கான பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சக்திவேல், விஜய பத்மா, பொன்பாண்டியன், சித்துராஜு, ராஜ்குமார், கலைச்செல்வன், கதிர்வேலு, முருகன், பாலச்சந்திரன், ராக்கியப்பன், ராஜேந்திர குமார், விஜய சங்கர், நாராயணமூர்த்தி, ஏகாம்பரம், விஜய ஆனந்த் ஆகிய 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல் கூறியதாவது: உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 பேராசிரியர்கள் இடம் பெற்றிருப்பது, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். கற்பித்தல், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றின் வாயிலாக ஆராய்ச்சித் துறையில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றார்.