3,08,106 மாணவர்களுக்கு பல் பரிசோதனை:
தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சத்து 8 ஆயிரத்து 106 பள்ளி மாணவர்களுக்கு பல் மற்றும் வாய் சுகாதாரப் பரிசோதனை மேற்கொண்ட மாபெரும் திட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, உலக சாதனை ஒன்றியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளை சார்பில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இணைந்து, ஆக., 17 முதல் 28ம் தேதி வரை இத்திட்டத்தை நடத்தின. கோல்கேட் – பாமாலிவ் நிறுவனம் நிதியுதவி வழங்கியது. விமி மேஜிக் நிறுவனமும் இம்முயற்சியில் இணைந்து செயல்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே பல் மற்றும் வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பல் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துதல், முறையான பல் பராமரிப்புப் பழக்கங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுடன் இம்முகாம் நடத்தப்பட்டது.
இத்திட்டத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, உலக சாதனை ஒன்றியத்தின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் கோவை கிளைப் பிரதிநிதிகள், சான்றிதழை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் டாக்டர் தினகர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
