நாளை தாராபுரத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய் நாளை கோவை வருகையையொட்டி, அவிநாசி சாலை உள்ளிட்ட மாநகரப் பிரதான பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை கோவை மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
1. வெளியூரில் இருந்து கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நீலாம்பூர் வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், சின்னியம்பாளையம் மற்றும் ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதை:
இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாகச் சென்று சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர் மற்றும் சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வர வேண்டும்.
2. மாநகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் (Light Motor Vehicles):
நீலாம்பூர் பகுதியில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள், L&T பைபாஸ் வழியாகச் சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர் மற்றும் சிங்காநல்லூர் வழியாக மாநகருக்குள் நுழையலாம்.
3. அவிநாசி சாலை வழியாக மாநகரில் இருந்து வெளியே செல்லும் பேருந்துகள் & கனரக வாகனங்கள்
லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இருந்து புலியகுளம், ராமநாதபுரம் மற்றும் சிங்காநல்லூர் வழியாகச் சென்று L&T பைபாஸை அடைந்து தங்களது இலக்குகளுக்குச் செல்லலாம்.
4. அவிநாசி சாலை வழியாக வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் V.K. ரோடு வழியாக வரும் வாகனங்கள் மசக்காளிபாளையம் சாலை மற்றும் சிங்காநல்லூர் வழியாகச் செல்லலாம். ஹோப்ஸ் வழியாக வரக்கூடிய வாகனங்கள், டைட்டல் பார்க் சந்திப்பில் திரும்பி காமராஜர் சாலை மற்றும் சிங்காநல்லூர் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5. காளப்பட்டி & கோல்ட்வின்ஸ் பகுதிக்கான மாற்றுப் பாதைகள்:
காளப்பட்டி சந்திப்பில் இருந்து சித்ரா – அவிநாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் தென்னம்பாளையம் வழியாக அவிநாசி சாலைக்குச் செல்ல வேண்டும்.
கோல்ட்வின்ஸ் சாலையில் இருந்து அவிநாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள், ஹவுசிங் யூனிட் ரோடு மாருதி பேக்கரி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி விரையம்பாளையம் சாலை வழியாகக் காளப்பட்டி சந்திப்பை அடைய வேண்டும்.
விமான நிலையப் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்:
நாளை (30.09.2026) கோவை சர்வதேச விமான நிலையத்திற்குப் பயணிகளை ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள், தங்களது திட்டமிட்ட பயண நேரத்திற்குக் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாளை நாள் முழுதும் விமான நிலைய வளாகத்திற்குள் கால் டாக்ஸிகள் மற்றும் இதர வாகனங்களை நிறுத்த முற்றிலும் அனுமதியில்லை.
கனரக வாகனங்களுக்கு முற்றிலுமாகத் தடை:
நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கோவை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் காவல் துறையின் இந்த அவசரப் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகரக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
