மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவர் சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் ‘பிட்டு தபாகி’ என்று அறியப்படும் இவர், ஜனவரி 2026-ல் குடியரசு தினத்தன்று அஜ்னார் நதியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தனியாகத் தொடங்கினார்.
உள்ளூர் கோயில் அருகே நதியில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசி மற்றும் துர்நாற்றம் அவரை இம்முடிவை எடுக்கத் தூண்டியது.
தொடக்கத்தில் நண்பர்கள் சிலருடன் இப்பணியை ஆரம்பித்தாலும், காலப்போக்கில் அது அவரது தனிநபர் முயற்சியாக மாறியது. எளிய குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
போதிய பாதுகாப்பு உபகரணங்களோ நீச்சல் பயிற்சியோ இன்றி, சாதாரண எளிய கருவிகளைக் கொண்டே நதியில் இறங்கி டன்கணக்கான கழிவுகளைத் தொடர்ந்து அகற்றினார். தூய்மைப் பணிகளுக்கான செலவுகளையும் தனது சொந்த சேமிப்பிலிருந்தே மேற்கொண்டார்.

கடுமையான இந்த களப்பணியின் போது அவருக்கு தோல் அரிப்பு, கை-கால் தொற்றுகள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டன. இருப்பினும் விடாமுயற்சியுடன் அஜ்னார் நதியை மாற்றியமைத்த அவரது களப்பணி வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றன.
இவரது நதி மீட்பு முயற்சியைக் கண்ட நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் அமைப்பான ‘தி ஓஷன் கிளீனப்’ அமைப்பின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான போயன் ஸ்லாட், சமூக வலைதளம் மூலம் சுரேந்திர சிங்குக்குத் தங்கள் அமைப்பில் பணியாற்றுவதற்கான அழைப்பை விடுத்தார்.
அத்துடன், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சுரேந்திர சிங்கை நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், அவரது பணிகளுக்கு அரசு தரப்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், பிட்டு உடன் தி ஓஷன் கிளீனப் அமைப்பினர் வீடியோ மூலம் உரையாடி உள்ளனர். இதை தொடர்ந்து அவருடன் இணைந்து பணிசெய்ய தன்னார்வலர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தான் இந்தியாவில் வேறு எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று தூய்மை பணிசெய்ய வேண்டும் என்பதை சமூக வலைத்தளத்தில் கூற தனது இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்வோரை பிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
முறையான பாதுகாப்பு மற்றும் நிதியுதவி இல்லாத சூழலிலும் ஒரு நதியை மீட்டெடுத்த இந்த இளைஞரின் முயற்சி, தற்போது மாநில எல்லைகளைத் தாண்டி உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. தனியே போராடிய இந்த பசுமை ஆர்வலருக்கு இன்று கிடைத்துள்ள ஆதரவை வைத்து, பிற மாநிலங்களுக்கும் சென்று தூய்மை பணி செய்ய முயற்சிப்பது வரவேற்கத்தக்கது.
