கோவை, வெள்ளானைப்பட்டி அருகே உள்ள மோலப்பாளையத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் குதிரையேற்ற போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

ஈக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா ஃபெடரேஷன் சார்பில் நடத்தப்பட்ட இந்த குதிரையேற்ற போட்டி, மோலப்பாளையத்தில் உள்ள பவர் ஹவுஸ் மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன. 100 செ.மீ., 110 செ.மீ. மற்றும் 120 செ.மீ. என மூன்று பிரிவுகளில் ஷோ ஜம்பிங் போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா, திரைப்பட நடிகர்கள் ஆர்யா, ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், பி & எஸ் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் பிரியங்கா சுந்தர், ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் தலைவர் சக்தி பாலாஜி, ஐஆர்ஏ பேஷன் ஸ்டுடியோ நிறுவனர் பாரதி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டிகளின் முடிவில், கோல்கொண்டா சார்ஜர்ஸ் அணி 286 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை வென்றது. பெங்களூரு நைட்ஸ் அணி 291 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசை வென்றது. 311 புள்ளிகளுடன் சென்னை புல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்து, ஈக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்றது.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நீலகிரி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.
