பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ரக இலவச வேட்டி மற்றும் சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை இலவசமாக வழங்கப்பட உள்ளது. மொத்தம் 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி ஜரிகை பார்டர் சேலைகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகம் முழுவதிலும் மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், நாகர்கோவில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 13 முக்கிய சரகங்களில் உள்ள 248 விசைத்தறி கூட்டுறவு தொடக்க சங்கங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் இந்த உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய தரம் மற்றும் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 2 மீட்டர் அளவுள்ள வேட்டி ஒன்றுக்கு ரூ. 24.48 கூலி செய்ய நிர்ணயம் வேண்டும். 72 ரீட், 64 பிக் கொண்ட 5.50 மீட்டர் அளவுள்ள சேலை ஒன்றுக்கு ரூ. 63.36 கூலி வழங்க வேண்டும்.

துணியின் அடர்த்தி மற்றும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மின்சாரக் கட்டணம், மூலப்பொருட்களின் விலை, தொழிலாளர் கூலி, மற்றும் பின் அச்சு போடுபவர்களுக்கான கூலி ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு, புதிய கூலி உயர்வை அரசு அறிவித்து, முழுத் தொகையையும் உற்பத்தி தொடங்கப்படும் முன்பே வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.