அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் ஜவுளித்தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஜவுளித்தொழில் துறையினர் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபால் கூறியதாவது: விவசாயத்திற்கு அடுத்து ஜவுளித்தொழில் அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் 110 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி ஜவுளித்தொழில் துறையினருக்கு தேவைப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் முதல் தர பருத்தி 4 லட்சம் பேல்கள் கூட விளைவது இல்லை. நூற்பாலை துறையில் நூறாண்டுகள் கடந்த தமிழகத்தில் பருத்தி விளைச்சல் தற்போது வரை அதிகரிக்க சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களில் இருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், மாநில வரி எஸ்ஜிஎஸ்டி வாங்குகின்ற மாநிலத்துக்கே தமிழக நூற்பாலைகள் செலுத்துவதினால் வருடம் 950 கோடி ரூபாய்க்கு மேல் சராசரியாக மாநில வரியை இழக்கின்றோம்.
தமிழ்நாடு வாணிப கழகம் மூலம் நேரடியாக பருத்தி விளையும் மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழக ஜவுளித்தொழில் துறையினருக்கு வழங்கினால் இந்த வரியை நமது மாநில அரசே ஈட்ட இயலும்.
தமிழக ஜவுளித்தொழிலில் பெரும்பாலானவை எம்எஸ்எம்இ பிரிவை சேர்ந்தவை ஆகும். சர்வதேச விலையில், சர்வதேச தரத்தில் பருத்தி கிடைக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது நீண்ட இழை பருத்திக்கு மட்டும் ஆண்டு முழுவதும் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பெரும்பாலானோர் பயன்படுத்தும் குட்டை இழை பருத்திக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.
இதனால் ஜவுளித்தொழில் துறையினருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. சர்வதேச நாடுகளில் பருத்தியை குறிப்பிட்ட சில பன்னாட்டு நிறுவனத்தினரே கொள்முதல் செய்கின்றனர்.
இந்தியாவில் பருத்தி சீசன் சமயத்தில் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படுகிறது. மறுபுறம் ஏற்றுமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவது இல்லை. சீசன் முடிந்த பின் பன்னாட்டு நிறுவனத்தினர் செயற்கையாக விலை ஏற்றம் செய்கின்றனர். சிசிஐ நிறுவனமும் டிரேடர்கள் போல தினம் ஒரு விலைக்கு விற்பனை செய்வதால் சிறு நூற்பாலைகளால் போட்டியிட இயலாத நிலை தொடர்கின்றது.
நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் இறக்குமதி வரி விலக்கு காலதாமதமாக அறிவிக்கப்படுவதால் ஜவுளித்தொழில் துறையினருக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வருடம் இறக்குமதி ரத்து செய்யும் முன் பருத்தி 68000 கேண்டி விலை இருந்தது.
இறக்குமதி வரி ரத்து அறிவித்த பின், சரிந்த விலை 45 நாளில் மீண்டும் கூடுதலாக உயர்ந்ததுடன் தற்போது குறைந்த பருத்தியை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றோம். இதற்கு முக்கிய காரணம், பன்னாட்டு நிறுவனங்களே. பருத்தி விளையும் நாடுகளில் சீசன் சமயத்தில் வாங்கி குவிப்பதினால் இறக்குமதி ரத்து பிறகு அவர்களிடமே வாங்கும் அவல நிலை ஏற்படுகின்றது.
இடைபட்ட நாளில், நூல் ஜவுளி என சங்கிலி தொடரில் உள்ளவர்கள் கோடிகணக்கான ரூபாயை இறக்குமதி வரி ரத்து என்ற அறிவிப்பினால் விலை சரிந்து நிதி இழந்தனர். தற்போது மீண்டும் அதை விட விலை உயர்ந்து உள்ளது. தாமதமாக அறிவித்த இறக்குமதி வரி ரத்தின் தோல்வியையும் மத்திய அரசின் தவறான தொழில் கொள்கையையே காட்டுகின்றது.
தமிழக அரசு சூழ்நிலைகளை உணர்ந்து நூறாண்டுகள் கடந்த ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதே போல ஜவுளித்தொழில் மேம்படுத்த மெகா பார்க், மினி பார்க் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இவற்றில் எத்தனை ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதனால் புதிதாக எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை அரசு வழங்க வேண்டும். மேற்கண்ட புள்ளிவிபரங்களை கொண்டு நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்து உரிய பயனாளர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
