கோவை மாநகராட்சியில் காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி பகுதிகளை உள்ளடக்கி ரூ.824 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. திட்டத்தின் கீழ் 9 வார்டுகளில் மொத்தம் 411 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 33,637 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் திட்ட அறிக்கையின்படி, வார்டுகள் 4, 5, 6, 7, 8, 9, 10, 21, 22 மற்றும் 23 ஆகிய பகுதிகள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளின் நில அமைப்பு மற்றும் எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சியை கருத்தில் கொண்டு கழிவுநீர் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் 411 கி.மீ., கழிவுநீர் குழாய்கள், 15,777 ஆளிறங்கு குழிகள், 10 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 5 கழிவுநீர் உயர்த்தும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

2030-ம் ஆண்டில் இப்பகுதிகளின் மக்கள் தொகை 1.30 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கழிவுநீர் உற்பத்தி தற்போது 13.37 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.), இடைக்காலத்தில் 17.66 எம்.எல்.டி., எதிர்காலத்தில் 23.09 எம்.எல்.டி., என கணிக்கப்பட்டுள்ளது.

சேகரிக்கப்படும் கழிவுநீர், குழாய்கள் மற்றும் உந்து நிலையங்கள் மூலம் ஒண்டிப்புதூரில் அமைக்கப்பட உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையம் தினமும் 17.66 எம்.எல்.டி., கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட உள்ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா கூறுகையில், திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனரகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய நிதிக்குழுவின் சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் ஏற்கனவே 4 தொகுப்புகளாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சின்னவேடம்பட்டி-சரவணம்பட்டி பணிகள் 44 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஒண்டிப்புதூரில் பணிகள் சுமார் 70 சதவீதம் முடிந்துள்ளன. வடவள்ளி, வீரகேரளம், துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் நடைபெறும் பணிகள் 42 சதவீதம் நிறைவடைந்துள்ளன.