இன்று பல வீடுகளில் வாட்டர் பில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீரில் உள்ள அழுக்குகள், உப்புத்தன்மை உள்ளிட்டவற்றை நீக்கி சுத்தமான தண்ணீரை வழங்குவதால் ஆர்.ஓ பியூரிபையர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால், ஆர்.ஓ தண்ணீரை தொடர்ந்து குடித்தால் முடி கொட்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. உண்மையில் ஆர்.ஓ தண்ணீருக்கும், முடி உதிர்வுக்கும் தொடர்பு உள்ளதா என்பதைப் பார்ப்போம்.
வாட்டர் பில்டரில் வரும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடிப்பதால் நேரடியாக முடி கொட்டும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், சுத்திகரிப்பு முறையில் தண்ணீரில் உள்ள பல்வேறு உப்புகள், கனிமங்கள் குறைக்கப்படுகின்றன. இதில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் குறையலாம்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம், துத்தநாகம் அவசியம். தண்ணீரில் இருந்து கிடைக்கும் இந்த தாதுக்கள் கிடைக்காமல் போகும்போது, நமது உடலின் ஊட்டச்சத்து சமநிலை மாறி, முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல தலைமுடிக்கு பயன்படுத்தும் தண்ணீரைப் பற்றியும் சில விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். நிலத்தடி நீரில் கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதிகமாக இருந்தால் அது ‘கடின நீர்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தும்போது தலைமுடியில் சில கனிமப் படிவங்கள் ஏற்படலாம். இதனால் முடி வறண்டு போவது, கரடுமுரடாக மாறுவது, சிக்கு ஏற்படுவது போன்ற பிரச்னைகள் சிலருக்கு ஏற்படலாம். தண்ணீரில் உப்புத்தன்மை அதிகம் இருந்தால், அது தலைமுடியில் படிந்து வேர்களை பலவீனப்படுத்தும்.
அதேபோல சிலர் ஆர்.ஓ நீரிலும் தலைக்கு குளிப்பார்கள். இது தலையிலிருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, முடியை அதிக வறட்சியாக மாற்றும்.
வீட்டில் ஆர்.ஓ பியூரிபையர் பயன்படுத்துபவர்கள், தண்ணீரின் தரத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. டிடிஎஸ் கட்டுப்பாடு அல்லது மினரல் ரீ-மினரலைசேஷன் வசதி இருந்தால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தலாம்.
