சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், அதிமுகவில் இருந்து 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கம் செய்ததை மறுபரிசீலனை செய்து மீண்டும் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராகிய நீங்கள், கட்சியை வழிநடத்திச் செல்வதில் எடுத்த தவறான முடிவுகளால், 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டினர்.
2021 சட்டமன்ற தேர்தலில் டிடிவி.தினகரனுடன் கூட்டணி வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வம் ஒத்துக்கொண்ட நிலையில் நீங்கள் அதை உதாசீனப்படுத்தியதால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
2019ல் அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி மற்றும் தனி கட்சியாக இருந்த சரத்குமார் ஆகியோரை அரவணைக்காமல் 2021 சட்டமன்ற தேர்தலில் வெளியேற்றினீர்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ டெல்லி தலைமை பலமுறை கூட்டணி வைக்க முயன்றும் தன்னிச்சையாக செயல்பட்டதால் திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற வலிய வாய்ப்பை வழங்கினீர்கள்.
பாமக கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்த போதும், காலதாமதம் செய்த காரணத்தால் கூட்டணி வாய்ப்பை இழந்தோம், இப்படி தேடிவந்த பாஜ, பாமக போன்ற கட்சிகளின் கூட்டணி வாய்ப்புகளை தன்னிச்சையாக நிராகரித்தீர்கள். அதேபோல் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாடி வந்த தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை நம்மோடு இணைத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாக வெளியேற்றிவிட்டீர்கள்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் 2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
தங்களது இப்போக்கால் அதிமுகவினர் மாற்றுக் கட்சியில் கூட்டம் கூட்டமாக தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள். செயற்குழு, பொதுக்குழுவில் உங்களுக்கு எதிராக யாரும் மாற்று கருத்தைக் கூறக்கூடாது என செயல்படுகிறீர்கள். அதிமுக எந்த நிலைக்கு தாழ்ந்தாலும் நான் சொல்வதை மட்டும்தான் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மையில் உள்ளீர்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள்.
இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்கப்பட வேண்டும். உங்களை தமிழக முதல்வராக்கிய சசிகலா மற்றும் டிடிவி.தினகரனையும், அதே போல கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர்ந்தாலும் கூட அவர்களிடம் பேசி கட்சியில் சேர்த்து கட்சியை பலப்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் 6 மாதத்தில் வர உள்ளது. இதற்கு கட்சியை பலப்படுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
