ஜெகந்நாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிராப்பர்ட்டீஸ் சார்பில், மகா ருத்ர அபிஷேக விழா மற்றும் ஒரு லட்சம் ருத்ர பாராயணம் கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்க வளாகத்தில் இன்று கோலாகலமாக துவங்கியது.

நிகழ்வின் முதல் கட்டமாக, மதியம் 12 மணி முதல் பக்தர்கள் கலந்து கொண்டு, தாங்களே அபிஷேகம் செய்யும் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றது.
இந்த ஆன்மீக விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மகா ருத்ர அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு மகா அலங்காரம், பின்னர் மாலை 7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்படும்.
மகா ருத்ராபிஷேக விழாவில், சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன.

1008 லிட்டர் பசும்பால், 1008 தாமரைப் பூக்கள், 306 லிட்டர் தயிர், 108 இளநீர், 108 லிட்டர் கரும்புச் சாறு, 108 லிட்டர் பஞ்சாமிர்தம், 108 லிட்டர் பன்னீர், 108 லிட்டர் திருமஞ்சனம், 108 லிட்டர் சந்தனம், 108 லிட்டர் பழரசம், 108 கிலோ விபூதி, 18 கிலோ கரும்புச் சர்க்கரை, 18 கிலோ அரிசி மாவு, 18 லிட்டர் தேன் மற்றும் 18 லிட்டர் நெய் உள்ளிட்ட புனித திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
மேலும், அனைத்து இந்து நதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புனித நீர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன.
இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்ச்சி 20ம் வருடமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
