ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்கள் தவறானவை. ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை, ஆன்லைன் விற்பனை என தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: மதுவிலக்கு துறையில் ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்கள் தவறானவை. இணையத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை.

ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி மட்டுமே உள்ளது. அதன்பின் ரசீதுடன் நேரில் சென்று மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். டோர் டெலிவரி அல்லது ஆன்லைன் டெலிவரி வசதி கிடையாது. ஆன்லைன் முறையின் மூலம் எந்த மதுபானக் கடையில் என்னென்ன வகையான மதுபானங்கள் இருப்பு உள்ளன என்பது வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.

இந்த நடைமுறையால் டாஸ்மாக் பணியாளர்களின் பணிச்சுமை குறைவதுடன், 10 ரூபாய் கூடுதல் வசூல் போன்ற முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும்.

முதல்வரின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் மாற்றம் செய்யப்படும். 10 ரூபாய் கூடுதல் வசூலை கட்டுப்படுத்த முந்தைய ஆட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊழியர்களின் ஊதியம், மின்சார கட்டணம், மதுபான அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து நிர்வாக சிக்கல்களையும் படிப்படியாக சரிசெய்து வருகிறோம் என்றார்.