நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும், மலேசியா கோலாலம்பூரைச் சேர்ந்த பெர்சாட்வான் தமிழ் வளர்ச்சி அமைப்பும் மேற்கொண்டுள்ள பன்னாட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘இலக்கியத்தில் கிறித்தவ விழுமியங்கள்’ என்ற தலைப்பில் இணையவழி பன்னாட்டு வலையரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ் மற்றும் முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
வலையரங்கத்தின் சிறப்பு விருந்தினராக மலேசியாவைச் சேர்ந்த கல்வியாளர் பெர்சியஸ் ஜேம்ஸ் பங்கேற்று பேசியதாவது: தமிழ்மொழி வளர்ச்சியில் கிறித்தவ அறிஞர்கள் ஆற்றிய அரிய பங்களிப்புகள், கிறித்தவ விழுமியங்கள், மனிதநேயம், அன்பு, சமத்துவம் மற்றும் சேவை மனப்பான்மை ஆகிய உயரிய பண்புகளை பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கதைகளின் வாயிலாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் பெர்சாட்வான் தமிழ் வளர்ச்சி அமைப்பின் தலைவர் மல்லிகா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
