சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளயில் சச்சிதானந்தா மாதிரி ஐக்கிய நாடுகள் சபை – அமர்வு 2 தொடக்க விழா நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட கண்ணன் ராஜரத்தினம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்: ஐநா சபை என்பது உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடிப் பேசுவதற்கான ஒரு தளம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான ஐநா சபை கடந்த 80 ஆண்டுகளாகப் பெரிய அளவிலான உலகப் போர்கள் வராமல் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் 66% மக்கள், 35 வயதிற்குட்பட்டவர்கள். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். நீங்கள் தலைவர்களாக உருவெடுக்கும் போது, சமரசத்திற்கும், அமைதிக்கும், கூட்டாண்மைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழர்களான ஆற்காடு ராமசாமி முதலியார் மற்றும் லட்சுமணசாமி முதலியார் போன்றோர் ஐநா சபையின் தொடக்க காலத்தில் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று பேசினார்.
நிகழ்விற்கு தலைமை தாங்கி பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: நமது தமிழ்ப் பண்பாடு “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கற்பிக்கிறது. அனைத்து மக்களையும் நம்மவர்களாகக் கருதும் இந்த எண்ணமே உலக அமைதிக்கு அடித்தளம் என்று பேசினார்.
நிகழ்வில் பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கல்விப்புல முதன்மையர் ஷீலாகிரேஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
