ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற சுமார் 600 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீணா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார்.

அவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டுகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இணைப்புகளில் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். கல்லூரி மற்றும் மாணவர்களை உயர்த்துவதில் முன்னாள் மாணவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.

கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் மற்றும் டெக் கார்டு நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் கூட்டாண்மைத் துறைத் தலைவர்  மார்க் மெலமேட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து ‘ஸ்பாட்லைட்’ என்ற முன்னாள் மாணவர் இதழ் வெளியிடப்பட்டது. இந்த இதழில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களின் சாதனைகள், வெற்றிக் கதைகள் மற்றும் இனிய நினைவுகள் இடம்பெற்றிருந்தன.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் கல்லூரி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்களுக்கு ‘முன்னாள் மாணவர் சிறப்பு விருதுகள்’  வழங்கப்பட்டன.