இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் மீண்டும் உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி சேவைகள் விரிவாக்கம், நெட்வொர்க் மேம்பாடு மற்றும் ஸ்பெக்ட்ரம் முதலீடுகளுக்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. இந்தச் செலவுகளை சமநிலைப்படுத்தும் நோக்கில், கட்டண உயர்வை நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்ட்ரம் இன்ஸ்டியூஷனல் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகியவை, இந்த ஆண்டுக்குள் மொபைல் கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

4ஜி மற்றும் 5ஜி சேவைகளின் விரிவாக்கம், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் உயர் தர நெட்வொர்க்குகளுக்கு மாறுவது போன்ற காரணங்களால், ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை உயர்த்த நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களின் மாதாந்திர செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சராசரியாக ஒரு பயனருக்கு மாதத்திற்கு ரூ.20 முதல் ரூ.40 வரை கூடுதல் செலவு ஏற்படலாம். குறிப்பாக அதிக டேட்டா பயன்படுத்துபவர்கள் மற்றும் குடும்பத் திட்டங்களை பயன்படுத்துவோர் அதிக பாதிப்பை சந்திக்கலாம்.

தற்போது தனியார் டெலிகாம் சந்தையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களே முக்கிய பங்கைக் கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு மாற்று வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதனால், கட்டண உயர்வு பொதுமக்களின் மாதாந்திர செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர் ரூ.350 செலவு செய்தால் தான் ஒரு மாதம் செல்போனை இண்டர்நெட்டுடன் பயன்படுத்த முடியும். இணைய சேவை இல்லாத வாடிக்கையாளர்கள் கூட மாதம் ரூ.200 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இன்கம்மிங் கால் கூட வராது.