கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டவா்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

2026 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் ‘பத்ம விருதுகள்’ இரண்டு பிரிவாக வழங்கப்பட்டது. 131 பேர் இவ்விருதுகளுக்கு தேர்வான நிலையில் 66 பேருக்கு மே 26ம் தேதி விருது வழங்கப்பட்டது. அடுத்த பிரிவில் உள்ளவர்களுக்கு ஜூன் 23ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சமூக சேவகருமான எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு இந்திய அரசின் மூன்றாம் உயரிய விருதான பத்ம பூஷன் விருது நேற்று டில்லியில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எஸ்.கே.எம். மயிலநாதன், 1945ல் ஈரோடு மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 1980களில்  கோழிப்பண்ணை விவசாயிகள் நல சங்கத்தை துவங்கிய இவர், தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்திற்கு முக்கிய பங்காற்றினார்.

மேலும் தனது விவசாயக்குடி மக்கள் நலனுக்காக 150க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது, விளைநிர்ணயிப்பது போன்றவற்றில் உள்ள சவால்களை தீர்க்க ஆய்வுகளை மேற்கொண்டார்.

கிராமப்புற பகுதிகளில் படித்த இளைஞர்கள், கல்வி கற்காத மக்கள் பலருக்கும் சுயவேலைவாய்ப்பு முறையை அறிமுகம் செய்து, அவர்களை முன்னேற்ற வழிகாட்டியாக இருந்துள்ளார். 1999ம் ஆண்டில் தனது ஊரில் உள்ள 2 கிராமங்களை தத்து எடுத்து அங்கு வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு, உடை, தங்க இடம், இலவச மருத்துவம், திருமண உதவி, பிரசவத்திற்கு உதவி, உயிரிழந்தோரின் உடலுக்கு நல்லடக்கம் செய்தல் என பல சமூக பணிகளை செய்து வந்தவர் இவர்.

எஸ்.கே.எம். குழுமத்தின் தலைவரும் எனும் தொழிலதிபர் அடையாளத்தை கடந்து, சமூக சேவகர் என்பதை தாண்டி, உலக சமுதாய சேவா சங்கத் தலைவராக இவர் 37 ஆண்டுகால இருந்து வருகிறார். 2013ம் ஆண்டு ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற இவருக்கு இந்த ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருது கிடைத்துள்ளது தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் கௌரவமாக பார்க்கப்படுகிறது.