தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் பொதுமக்களுக்கு அசைவ விருந்து, அரிசி மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ஆகியவற்றை தன்னார்வலர் உமா மகேஷ்வரி வழங்கியுள்ளார்.
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்களும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் தன்னார்வலரும் இளம் பெண் தொழிலதிபருமான உமா மகேஷ்வரி, கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதுகுறித்து தன்னார்வலர் உமா மகேஷ்வரி பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் இது கூடுதல் சிறப்புக்குரியது. இந்தச் சிறப்பான நாளில் அன்னதானமும், அரிசி மூட்டைகளும், மருத்துவ உதவி தேவைப்படும் முதியோர்களுக்கு மருத்துவ நிதியுதவியும் வழங்கியது மனநிறைவைத் தருகிறது. பசியில்லா உலகம் படைப்பதில் முதல்வர் விஜய் அவர்கள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாகவே அன்னதானம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு முக்கியத்துவம் தந்து வருகிறேன். இதன் மூலம் பயன்பெற்ற பொதுமக்களது வாழ்த்துகளும் ஆசிர்வாதமுமே முதல்வர் அவர்களுக்கான எங்களது பிறந்தநாள் பரிசு எனத் தெரிவித்தார்.
