சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் திருக்குறள் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் சித்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில்: மேடையில் பேசுவது எளிதான காரியம்தான். தொடர் பயிற்சியின் மூலம் தயக்கமில்லாமல் பேசுவது சாத்தியப்படும். போட்டிகளில் பரிசு வாங்குவது முக்கியமல்ல, கலந்துகொள்ளும் உற்சாகமும் நம்பிக்கையும்தான் முக்கியம்.

உலகில் பல நூற்றாண்டுகளைக் கடந்த மிகப்பழமையான மொழிகள் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம், சீனம், தமிழ். இதில் நம் தொல்லியல் அகழ்வாய்வுகள் வாயிலாக மிகப்பழைமையானது தமிழ் மொழிதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பக்தி இலக்கியங்கள் என எல்லாவற்றின் சாரத்தையும் உள்வாங்கிப் புதிய மரபைத் தோற்றுவித்தவர் பாரதி.

தமிழில் முதன்முதலில் ‘வசன கவிதை’யை அறிமுகப்படுத்தியவர் பாரதிதான். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியில் இருந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களை எழுதினார். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.