மேட்டுப்பாளையம் மற்றும் கோவை இடையே இயக்கப்படும் மெமு ரயில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரின் அன்றாடப் பயணத்திற்கு முக்கிய போக்குவரத்தாக உள்ளது.

8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் தினசரி அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குறிப்பாக வேலை நேரங்களில் கோவை நகரத்தை நோக்கி செல்லும் பயணிகள் பெருமளவில் இருப்பதால், ரயிலின் உள்ளே நிற்க கூட இடம் இல்லாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் தினமும் கடும் நெரிசலில் சிக்கி பயணிகள் சிரமம் அடைகின்றனர்.

நெரிசலால் பலர் ரயில் கதவுகளின் அருகே நின்றும், சிலர் கதவுகளைப் பற்றிக்கொண்டும் அபாயகரமான முறையில் பயணம் செய்வதால், உயிருக்கு ஆபத்தானதாகவும் மாறி வருகிறது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் நீண்டகால கோரிக்கையான மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் உறுதியளித்துள்ளார்.

சமீபத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்த அவர், தற்போது 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெமு ரயிலில் கடும் நெரிசல் நிலவுவதால், பாலக்காடு ரயில்வே கோட்டம் விரைவில் கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இந்த ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்கும் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதமே வெளியிடப்பட்ட நிலையில், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.