2026-27 கல்வியாண்டுக்கான அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான அதிகாரப்பூர்வ கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு மொத்தம் 210 வேலை நாட்களும், 155 விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆண்டு முழுவதும் 22 அரசு விடுமுறைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பெரும்பாலான சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூலை 19, செப்டம்பர் 19 மற்றும் டிசம்பர் 19 ஆகிய மூன்று சனிக்கிழமைகள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு மற்றும் விடுமுறை அட்டவணை
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் 25 வரை நடைபெறும். இதையடுத்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை மாணவர்களுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16 முதல் 23 வரை நடைபெறும். பின்னர் டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் ஜனவரி 4 அன்று மீண்டும் திறக்கப்படும்.
விடுமுறைகள்
இந்த கல்வியாண்டில் பல பண்டிகைகள் வார இறுதியுடன் இணைந்து வருவதால் மாணவர்களுக்கு தொடர்ச்சியான விடுமுறைகளும் கிடைக்கின்றன.
- செப்டம்பர் 4 கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, அதனைத் தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிறுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை.
- செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி திங்கட்கிழமை வருவதால், அதற்கு முந்தைய வார இறுதியுடன் இணைந்து 3 நாட்கள் விடுமுறை.
- அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்படுவதால், வார இறுதியுடன் சேர்த்து 4 நாட்கள் தொடர் விடுமுறை.
- நவம்பர் 8 தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், வழக்கமான வார இறுதி விடுமுறையே அமைகிறது.
- ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல் பண்டிகை வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுவதால், 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
கோடை விடுமுறை
இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் 2027 ஏப்ரல் 23 ஆகும். இதையடுத்து ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
