நீட் யுஜி மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வு நிறைவடையும் வரை இந்தியாவில் டெலிகிராம் மெசேஜிங் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நீட் (யுஜி) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய தேர்வு முகமை பரிந்துரைத்ததையடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 69ஏ-ன் கீழ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு வரும் ஜூன் 22, 2026 உடன் முடிவுக்கு வரும்.
ஜூன் 30ம் தேதி வரை டெலிகிராம் செயலியில் ஏற்கனவே பதிவிட்ட குறுஞ்செய்திகளைத் திருத்தும் ‘மெசேஜ் எடிட்டிங்’ வசதியையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
