குமரகுரு கல்வி நிறுவனங்களின் 38வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழா, நான்கு அமர்வுகளாக நடத்தப்படுகிறது.

சிறப்பு விருந்தினராக iVP செமி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜா மாணிக்கம், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில்: பொறியியல் பட்டம் பெறும் இளம் தலைமுறையினர் இந்தியாவின் செமிகண்டக்டர் புரட்சிக்கு முன்னோடிகளாக திகழ வேண்டும்.

சிறிய தீவு நாடான தைவான் இன்று உலக செமிகண்டக்டர் துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பே காரணம். இந்தியாவிலும் அதேபோன்ற சூழலை உருவாக்க வேண்டும். கோவையில் செமிகண்டக்டர் வேஃபர் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக உள்ளூர் தொழில்துறையினருடனும் அரசுடனும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தலைமை உரையில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் பேசுகையில்: உண்மையான தன்னிறைவு என்பது அரசியல் சுதந்திரத்தால் மட்டும் கிடைக்காது; அறிவுசார் சொத்துரிமை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகிப்பதன் மூலமே அது சாத்தியமாகும். வெளிநாட்டு தொழில்நுட்பங்களை எதிர்பார்க்காமல், உலகம் இந்தியாவை நோக்கிப் பார்க்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 2021–2025 கல்வியாண்டைச் சேர்ந்த 1,596 மாணவர்கள், 16 பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பட்டம் பெற்றனர்.

நிகழ்வில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்பிரமணியம், குமரகுரு ஸ்கூல் ஆஃப் இன்னோவேஷன் இயக்குநர் செந்தில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எழிலரசி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.