மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் தவெக அரசு தோல்வி அடைந்துள்ளது. மக்களின் நம்பிக்கையை அரசு இழந்து வருவதாகவும், திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியாக இருந்தபோது கோவைக்கு தேவையான நிதிகளை திமுக அரசு வழங்கியது. தற்போது தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதற்கான தீர்வை அரசு இன்னும் கொண்டு வரவில்லை.

மின் வாரியத்தில் முறையான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. உயரதிகாரிகளை மட்டும் அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர். கடைநிலை ஊழியர்களின் கருத்துகள் கேட்கப்படவில்லை. திமுக ஆட்சியில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதுடன், மின்தடை குறித்த புகார்களுக்கு உதவி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டது.

மின்வாரியத்தில் டெண்டர் நடைமுறையில் உள்ள விதிகளின் கீழ் யாரும் எளிதில் தவறு செய்ய முடியாது ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படும் நிலையில், மின்வாரியத்தை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டது.

ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் ஒரு அமைச்சரையே மிரட்டும் அளவிற்கு சிலருக்கு துணிவு இருந்தால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் தேவையற்ற பதற்றத்தை அரசு உருவாக்குகிறது.

அரசு மாறலாம், அதிகாரிகள் மாற மாட்டார்கள். மின்வெட்டுக்கு அதிகாரிகளையே காரணம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு கால அவகாசம் கேட்பது நியாயமல்ல. சூலூரில் நடந்த துயர சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் தற்போதைய ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.  திமுகவை ஒழிப்போம் என்று கூறியவர்கள் அரசியலில் காணாமல் போயுள்ளனர். திமுக என்பது பெரிய ஆலமரம் போன்ற இயக்கம்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய அதே அணுகுமுறையையே தற்போது முதல்வர் தொடர்கிறார். இன்று தேர்தல் நடைபெற்றால் திமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் அளவிற்கு மக்களின் மனநிலை உள்ளது. கோவையில் பெரியார் நூலகத்தை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் எப்போது திறப்பார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.