காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டில் பட்டப்பகலில் மண்ணெண்ணெய் குண்டு பாட்டில் வீசிய சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கோவையில் தொடரும் வன்முறை கலாசாரத்தைத் தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் கோவையில் கல்லூரியில் படித்து வந்த போது கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திக் என்பவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தங்கியிருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதை அறிந்த அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்து அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால் தன்னிடம் தொடர்ந்து பேசும்படி அந்த இளம்பெண்ணிற்கு கார்த்திக் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதற்கு அந்த இளம்பெண் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 24.5.2026 அன்று கார்த்திக் (எ) மாரியப்பன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து அவரின் குடும்பத்தினரை தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டே மண்ணெண்ணெய் பாட்டில்களை சரமாரியாக வீசிவிட்டு தப்பிவிட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் இக்கொடூரச் சம்பவம் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட துயரத்தின் ரணம் ஆறுவதற்குள்ளாகவே, உடனடியாகவே இன்னொரு இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீச்சு நடந்தேறியிருக்கிறது.

பட்டப்பகலில் இளம்பெண்ணின் வீட்டில் வன்முறை அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், இதுபோன்ற வன்முறை கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.