கோவையின் தலைசிறந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றான கே.ஜி. மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை காலங்களில் வழங்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்பான ஏ.டி.எல்.எஸ். எனும் ‘அட்வான்ஸ்டு ட்ராமா லைஃப் சப்போர்ட்’ எனும் பயிற்சி குறித்த ஒரு நாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றது.

முதுகலை மருத்துவர்களுக்கு என பிரத்தியேகமாக நடத்தப்பட்ட இந்த பயிலரங்கம், கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் ‘பத்ம ஸ்ரீ’ டாக்டர் ஜி.பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்றது. விபத்து நேரிடும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பல்வேறு அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில், மருத்துவர் ரக்ஷித் மற்றும் மருத்துவர் விஜய் அழகர் ஆகியோரின் முன்னெடுப்பில் இந்த நிகழ்வு முதல்முறையாக கே.ஜி.மருத்துவமனையில் நடைபெற்றது.
விபத்து சம்பவங்களின் விரிவான ஆய்வு மற்றும் கலந்தாலோசனை பற்றி முதலில் விவாதிக்கப்பட்டது. பின்னர், விபத்து அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்ட தருணத்தில் இருந்து தொடங்கும் முதல் 60 நிமிடங்களில் செய்யவேண்டியவை, ஒரே நேரத்தில் உடலின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காயங்களுடன் வருவோரை எப்படி அணுகுவது என்பது உள்ளிட்ட 10 தலைப்புகளில் நிபுணர்கள் சிறப்புரையாற்றினர்.
